Friday, November 02, 2007

அந்த நாள் ஞாபகம்

கல்லூரி நாட்களில் வார இறுதியில் நண்பர்கள் நாங்கள் ஊர் சுற்றுவது வழக்கம். ஒரு முறை நான், கார்த்திக், விஜய் மற்றும் மகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏரல் ஆற்றில் குளிக்கச் சென்றோம். நாங்கள் எப்போதும் பைக்கில் செல்வது வழக்கம். பாதி வழியில் மகியின் பைக்கில் இருந்து கரும்புகை வெளியாக ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வண்டி நின்று விட்டது. நாங்கள் பல முறை start செய்தும் முடியவில்லை. கார்த்திக் ஒரு குட்டி மெக்கானிக். அவன் பெட்ரோல், ஸ்பார்க் ப்ளக் எல்லாவற்றையும் சோதனை செய்தான் கடைசியில் இஞ்சின் ஆயிலை பார்க்கும் போது மகி ஆயிலை மாற்றாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியது தெரியவந்தது.

நானும் கார்த்திக்கும் சென்று இஞ்சின் ஆயில் வாங்கி வந்தோம். புது ஆயிலை மாற்ற பழைய ஆயிலை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆயில் டேங்க் போல்ட்டை கழற்றும் போது, அது கைதவறி மண்ணில் விழுந்து விட்டது. விஜய் போல்ட்டை எடுத்து மகியிடம் கொடுத்து "டேய், மச்சான் மண்ணை துடைடா" என்றான். மகி போல்ட்டை வாங்கி வேகமாக மண்ணில் வீசி எறிந்து காலால் நன்றாக தேய்த்தான். நாங்கள் உடனே ஏண்டா அதை தூக்கி மண்ணுல போட்ட என்று கேட்டோம். மகி "நீங்க தானடா மண்ணுல துடைன்னு கொடுத்தீங்க" என்றான். நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்த மகி திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான். சற்று நேரத்திற்கு பின் சொன்னோம் "டேய்...மகி நாங்க சொன்னது போல்ட்ல உள்ள மண்ணைத் துடைன்னு..ஆனா அது எப்படிடா உனக்கு மண்ணுல துடைன்னு காதுல கேட்டது."

இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வருகிறது. மகி போல்ட்டை வாங்கி எறிந்த விதமும் அதற்கு பின் அவன் முழித்த முழியும் இன்னும் என் நினைவுகளில் இருக்கின்றன.

பி.கு: நண்பன் மகி இப்போது சென்னையில் ஒரு sofware company-ல் பணிபுரிகிறான். அவன் இதை கண்டிப்பாக படிப்பான். பார்ப்போம் படித்து விட்டு என்ன செய்கிறான் என்று.