Friday, September 28, 2007

எதிலோ படித்த கவிதை

மகனே...
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்...
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்

-எழுதியவர் பெயர் தெரியவில்லை

Wednesday, September 12, 2007

புதுக்கவிதைகள்

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
'பாபி' பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)

அருமையாய் நடித்தனர்...
(என டயரியில் எழுதுகிறாராம்)


இலக்கண சுத்தததோடே
எழுதனும் கவிதை என்றார்
கையிலே வாங்கிப் பார்த்துக்
கழிநெடில் விருத்தம் என்றார்
ஒருவரி உரசிப் பார்த்தார்
கருவிளங் காய்ஈ தென்றார்
மற்றொரு வரியைச் சுட்டி
மாற்றிந்தச் சீரை என்றார்
அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்
அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்
கடைசியில் திருப்பிப் பார்த்தேன்
கவிதையைக் காணோம் அங்கே!