Friday, October 26, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்

தோசைக்காரன்

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
"உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா".

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
"அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?"
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் - "சாவறதுக்கு வந்தியாடா?"

மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
"தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்"னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.



நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.


இந்த கவிதைகளை "ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்" தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.

Wednesday, October 24, 2007

ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு

கணினி தொழில்நுட்பம் தொடங்கிய நாள் முதலே இந்த ஹேக்கிங் என்ற சைபர் குற்றங்களும் தொடங்கிவிட்டன. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு விதமாக கணினித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது அதன் கூடவே ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களும் அதற்கு சமமாக வளர்ந்து நிற்கிறது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இதனைத் தடுக்க என்னதான் கணினி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்தாலும் அத்தகைய சாதனங்களின், மென்பொருட்களின் சக்தியையும் கடந்து இன்று ஹேக்கிங் மகா பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த "வளர்ச்சி"யின் தொடர்ச்சியாக தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் விற்பனைக்கு வேறு வந்துள்ளதாம்!

அதாவது "வளர்ந்து வரும்" ஹேக்கர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செக்யூர் கம்ப்யூட்டிங் கார்ப்பரேஷன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது தனிப்பட்ட வைரஸ்கள் முதல் மேலும் எளிதான பல தொழில்நுட்பங்களை விற்பனைக்கு விட்டுள்ளதாம் சில ஹேக்கிங் கும்பல்கள்.

இந்த ஹேக்கிங் சாதனங்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கேயுரிய பாணியில் கணினித் தாக்குதல்களை செய்யமுடியும்.

தற்போது மட்டும் இதுபோன்ற ஆன்லைன் ஹேக்கிங் கருவிகள் மட்டும் 68,000 உள்ளதாக செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செக்யூர் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் லோ கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.

"சைபர் குற்றங்கள்" அதிவேகமாக அதிர்ச்சியூட்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த ஒரு உயர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு அரணையும் தகர்த்து நெட்வொர்க்குகளை நாசம் செய்ய புதிய மற்றும் நுட்பமான ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனை சாதித்த பிறகு அவர்கள் அடுத்தபடியாக அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த துறை வர்த்தக அளவில் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது" என்று எச்சரிக்கிறார்.

இந்த ஹேக்கிங் சாதனங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கு திறமை அவசியம். ஹேக்கர்கள் தற்போது எம்பேக் (Mpack), ஷார்க்2, நியூக்ளியர், வெப் அட்டாக்கர் (Webattacker) மற்றும் ஐஸ்பேக் (Icepack) ஆகிய ஹேக்கிங் கருவிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை பயன்படுத்தி எந்த ஒருவரும் எளிதாக ஹேக்கிங்கில் ஈடுபடலாம். இதனால் சைபர் கிரைம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் அதனுள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது முதல் தர ஹேக்கிங் கருவிகள் 1000 டாலர்களுக்கு கிடைப்பதோடு, 12 மாத தொழில்நுட்ப உதவி வேறு இதில் கிடைக்கிறதாம்.

இந்த ஹேக்கிங் கருவிகள் விற்பனையில் அவர்களுக்கு எந்த வித இடர்பாடும் இல்லை. அதாவது இந்த கருவிகளை பயன்படுத்தி ஹேக்கிங் செய்தாலும், இதனை வடிவமைத்த, விற்பனை செய்த நபர்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இக்கருவிகள் "இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே" என்ற பெயரில் உள்ளது.

எனவே ஹேக்கர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விற்பனையிலும் அவர்கள் கொடிகட்டி பறக்க துணிந்து விட்டார்கள். என்ன செய்யப்போகிறது கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.