Friday, October 26, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்

தோசைக்காரன்

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
"உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா".

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
"அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?"
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் - "சாவறதுக்கு வந்தியாடா?"

மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
"தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்"னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.



நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.


இந்த கவிதைகளை "ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்" தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.

No comments: