Monday, July 23, 2007

சில தகவல்கள்...

இந்த தடவை பெண்கள் அணியும் சில அணிகலன்கள் பற்றியும் அதன் பயன்களையும் குறிப்பிடுகிறேன். நான் இந்த தகவல்களை சற்று நாள் முன்னர் தான் வாசிக்க நேர்ந்தது. மேலும் வேறு தகவல்கள்/செய்திகள் நண்பர்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு மின்-அஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்.

மெட்டி:

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு:

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.
பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண் கொடி[அரணாக்கொடி]:

அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

இதர விசயங்கள்:

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

Thursday, July 19, 2007

மீண்டும் பத்து கட்டளைகள்.....

என்ன கொடுமை தர்மா இது என்று நீங்கள் புலம்ப வேண்டாம். நான் பஞ்ச் பாலாவும் அல்ல கருத்து கந்தசாமியும் அல்ல. தமிழ் கூறும் நல்வுலகுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை கடைபிடிப்பது. திருவள்ளுவர் காலத்திலிருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரை தான் இளைஞர்கள். அதன் பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்து விடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு
பாலருக்கும் பொது(ஆண்-பெண்). இனி...

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி: கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா(குமுதம் 1983).

Tuesday, July 17, 2007

ஆத்மா - ஒரு இசைத் தொகுப்பு

"கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம் பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச்செல்கிறது"- என்கிறார் கவிஞர் தாகூர்

இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது- கோபதாபங்களை தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களை தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது, என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.

நான் தினமும் கேட்கும் இசைத்தொகுப்பைப் பற்றி இங்கு உங்களுக்கு சொல்கிறேன். மகாகவி பாரதியின் சில பாடல்கள் "ஆத்மா" தொகுப்பில் வெளிவந்துள்ளன (2000-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது). பாம்பே ஜெயஸ்ரீ அனைத்து பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். சுரேஷ் கோபாலன் மற்றும் சபேஷ் ஆகியோர் இந்த தொகுப்பிற்கு இசை அமைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களான "அக்னி குஞ்சு" , "மனதில் உறுதி வேண்டும்" போன்ற பாடல்களை வெகு வேகமான இசையில் தான் நான் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் மிகவும் மென்மையாக, வித்தியாசமானதாக (முக்கியமாக ரசிக்கக் கூடிய) அளித்திருக்கிறார்கள். அதே போல், "சுட்டும் சுடர்விழிதான்..", "நல்லதோர் வீணை" போன்ற பாடல்களை ரொம்பவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நடையில் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பிலோ, இவ்விரண்டு பாடல்களும் மிகவும் மென்மையாக, ஒரு தாலாட்டினைப் போல் இருக்கிறது. மிகவும் அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது "மழை" என்ற பாடல்தான். ஒன்றரை நிமிடம் தான் வந்தாலும் கேட்டவுடன் தாளம் போட வைக்கும் பாடல் அது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது. மிகவும் வித்தியாசமான அனுபவம்.

"To look through his eyes, close your own. Open your heart. And allow him to touch Your soul ... your atma"

இணையத்தில் download செய்ய: http://www.tamilbeat.com/tamilsongs/devo/atma/

Wednesday, July 11, 2007

படித்ததில் பிடித்தது

இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக (திரு)விழாவிற்கு சென்றிருந்தேன். நான் வாங்கிய புத்தகங்களில் சற்று வித்தியாசமானது எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் கழனியூரன் தொகுத்த "மறைவாய் சொன்ன கதைகள்".
இந்தத் தொகுப்பில் 100 நாட்டுபுறக் கதைகள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
தமிழில் நாட்டார் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான தொகுதியாக வெளிவருவது இதுவே முதன்முறை. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருபவை.
மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறார்கள். ஆனால் இந்த நூறு கதைகளை தெரிந்து கொண்டாலே போதும், ஓரளவு பாலியல் ஞானத்துக்கு.
இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.
இதில் சில கதைகளை நான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் எழுத்தாளர் தமிழ் மணம் மாறாமல் மண்வாசனையுடன் கதைகளைச் சொல்லும் போது படிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இப்புத்தகத்தை உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுயிருக்கிறார்கள். இதன் விலை Rs. 230/- மட்டுமே.

திருப்பாவை விளக்கம் பற்றி...

சென்ற பதிப்பில் நண்பர் யோசிப்பவர் திருப்பாவை பாசுரத்திற்கு விளக்கம் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு சரியான விளக்கம் யோசிப்பவர்க்கோ, அல்லது வேறு நண்பர்களுக்கோ தெரிந்தால் பதிப்பிக்கவும்...

Monday, July 02, 2007

திருப்பாவை பாசுரம்

திருப்பாவை பாசுரம் ஒன்று சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஷ்ரேயா introduction பாடலில் கோமதிஸ்ரீ பாடிய மனதை வருடும் பாடல் அது.

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


விளக்கம்
திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப்
பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" (திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது