Thursday, August 09, 2007

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக...)

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.

பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
....................................
வேண்டாம்.

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஹைக்கு

சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?

அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.

கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.

நியூஜெர்ஸி நண்பரின்
'ஏஸி' காரில்
காஸ்ட் போட்டால்
'பாசமலர்' பாட்டு.

இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

clue-சரியான தமிழ் பதம் என்ன?

5 comments:

Boston Bala said...

---clue-சரியான தமிழ் பதம் என்ன?---

துப்பு அல்லது தடயம் என்று சொல்லலாம்
நன்றி: http://ta.wiktionary.org/wiki/clue

(விடை: வைரமுத்து?)

தர்மராஜ் said...

மிக்க நன்றி பாலா... ஆனால் இந்தக் கவிதைகளை எழுதியது வைரமுத்து அல்ல. சரியான பதிலை நாளை சொல்கிறேன்.

யோசிப்பவர் said...

//சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?
//
இதை சுஜாதாவின் ஏதோவொரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் எழுதியவர் அவரில்லை!!!

யோசிப்பவர் said...

Clue :- உதவிக் குறிப்பு!?!

தர்மராஜ் said...

//இதை சுஜாதாவின் ஏதோவொரு புத்தகத்தில் படித்ததாக ஞாபகம். ஆனால் எழுதியவர் அவரில்லை!!! //

யோசிப்பவர் பதில் சொல்லிவிட்டு, எழுதியது அவரில்லை என்கிறார். ஆனால் இந்தக் கவிதைகள எழுதியது எழுத்தாளர் சுஜாதா தான். இது அவருடைய கவிதைத் தொகுப்பான "நைலான் ரதங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. clue-தமிழாக்கம் செய்த Boston Bala-வுக்கும் யோசிப்பவர்க்கும் நன்றி.