ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.
பெரியாழ்வார் வியந்து, 'நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்' என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.
[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது]
என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `"அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.
இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.
அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.
யார் இந்தப் பெண்?
ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.
பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.
காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி
ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.
ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.
கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.
வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.
பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.
நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
ஆண்டாள் திருப்பாவை
ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத் தமிழ்மாலை' என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு 'சங்கத் தமிழ்மாலை' என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
"நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை" என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். 'தைந்நீராடல்' என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.
கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.
திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.
ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
"நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு."
அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.
திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.
மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் "மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்" என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா? மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.
ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.
மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.