Thursday, June 28, 2007

கவிதை!

நண்பர் நிலாரசிகன் எனது திருமண பரிசாக அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசளித்தார். அவர் எனது கல்லூரி வகுப்புத் தோழர். அவர் கவிதை எழுதுவது மட்டுமல்ல, நன்றாக மிமிக்ரியும் செய்வார். எனக்கு தமிழ் கவிஞர்களை, கவிதைகளை அறிமுகம் செய்தது அவர் தான்.

அவருடைய கவிதைத்தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை தருகிறேன்.

அப்பாவுக்கு....

தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
"எம்பொண்ணு ராஜகுமாரி
அவள திட்டாதே"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

உயிர் வாங்கும் பரிட்சை
நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
"எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
"நல்லா சாப்பிடுடா" என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளை தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
"நல்லா இரும்மா" என்று.

1 comment:

நிலாரசிகன் said...

நான் தவழும்
நாட்களில் என்
நடைவண்டியாய்
உன் நட்பு.

இன்று நான்
நடக்கிறேன்
உன் நினைவுத்தோளில்
சாய்ந்து கொண்டு...

வலைப்பூவிற்கு வருக வருக‌
என்னுயிர் நண்பா!