இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.
மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.
தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.
"Hush little baby, don't say a word Momma's going to buy you a mockingbird"
என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.
ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.
மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.
தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.
தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.
தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.
இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.
இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children's Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.
பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.
1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart's Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.
இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.
1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.
பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றி:
திண்ணை.காம்